சுதந்திரமான கருத்தியல்களால் வளமூட்டப்பட்ட ஒழுக்கம் பேணும் இளம் சந்ததியினரை உருவாக்குவோம்.
Search
வவுனியாவில் அதிகரிக்கும் கத்தி முனைத் திருட்டுக்கள் ! மக்கள் அச்சம்
simsuban
Nov 2, 2015
1 min read
வவுனியாவில் கத்தி முனையில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒரே இரவில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்காரணமாக மக்களை விழிப்புடன் இருக்குமாறு வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியாவில் இந்த மாதத்தில் இதுவரை கத்தி முனையில் ஒரே பாணியிலான நான்கு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கோவில்குளம், தட்சன்குளம், சாம்பல் தோட்டம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. இதன் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொன்னாவரசன்குளம் பகுதியில் இரு வீடுகளுக்குள் கத்தி, வாள்களுடன் புகுந்த குழு அவர்கள் அணிந்திருந்த தோடு, சங்கிலி உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இதேபோன்று, பூந்தோட்டம் பகுதியிலுள்ள கடை ஒன்றும் வெள்ளிக்கிழமை இரவு உடைக்கப்பட்டு 43,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை மறைத்தவாறு, கறுப்பு நிற ஜக்கெட் அணிந்து வீட்டின் பின் பகுதியூடாக உள்நுழைந்து கத்தி, வாள் என்பவற்றை காட்டி மிரட்டுவதுடன் வீட்டில் உள்ளவர்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடி வருகின்றனர்.இந்த திருட்டு நடவடிக்கைகளில் நான்கு, ஐந்து பேர் கொண்ட குழுவாக செயற்படுகின்றனர். கூடுதலாக ஒரே பாணியில் இடம்பெறும் இத் திருட்டுக்களில் தனிமையில் இருக்கும் வீடுகள் அதிகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.எனவே, மக்கள் இவ்வாறான திருட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்கவும். தமது வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளுடனும், பொலிஸ் நிலையங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி திருடர்கள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும்.அயல் வீடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக தெரியப்படுத்தினால் அவர்களின் உதவியுடன் திருடர்களை கைது செய்ய முடியும். தற்போது இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Comentarios